
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வருபவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று (பிப்ரவரி 27) சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
“அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்” என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் வெள்ளிக்கிழமை திமுகவில் இணையக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான அய்யப்பனும் திமுகவில் இணைந்தார்.
அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
அதன்பிறகு, தலைமைச் செயலகம் சென்ற பன்னீர்செல்வம், தனது போடிநாயாக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினாதார். அவருடன் அய்யப்பனும் தனது உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஓ.பன்னீர் செல்வம் கூறியது என்ன?
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அறிஞர் அண்ணா தொடங்கிய தாய் கழகமான திமுகவில் பெரு மகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்” என்று கூறினார்.
“தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அனைவரும் மீண்டும் இந்த ஆட்சியையே விரும்புகிறார்கள். உறுதியாக, வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும்” என்றும் அவர் கூறினார்.
“அரசியலில் ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப் போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி எந்தக் காலத்திலும் அதிமுக வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளார்” என்று கூறினார்.
“இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் (கருணாநிதி) காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய ஒரு அரசியலை முதலமைச்சர் மேற்கொள்கிறார் என்பதை உணர்ந்து தான் நான் திமுகவில் இணைந்துள்ளேன்” என்று அவர் கூறினார்.
“திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில், அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில், எப்படி ஏற்பட்டாலும் அதை தடுத்து, திராவிட இயக்கத்தை கட்டிக் காப்பதில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் நின்று, திராவிட சித்தாந்தத்தை காப்பதில் முதலமைச்சர் முன்னிலையில் உள்ளார்.” என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
“அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியில் சர்வாதிகாரத்தோடு அமர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் அந்தப் பதவியில் அமர்ந்த பிறகு, அதிமுகவை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறார். இதை நினைத்து தான் பல அதிமுக தொண்டர்கள் தங்களை திமுகவில் இணைத்துக்கொள்கிறார்கள். தென்மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் பழனிசாமி கவனத்துடன் இருக்கிறார்” என்று அவர் கூறினார்.
“திராவிட இயக்கத்தை காக்க, திராவிட கொள்கையைக் காக்க, தமிழ்நாட்டைக் காப்பதற்கும், வளர்ச்சிக்கும் ஒரு தலைசிறந்த இயக்கமாக திமுக விளங்கி வருகிறது என்பதை உணர்ந்து தான், நான் இன்று திமுகவில் இணைந்துள்ளேன். என்னை அரவணைத்துக் கொண்ட முதல்வருக்கு நன்றி. நான் ஒரு தொண்டனாகவே இணைந்துள்ளேன்” என தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி. ரவீந்திரநாத், “வரும் சட்டப்பேரவை தேர்தலில், தளபதி ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூறியது என்ன?
“முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர். அவரது வரவு நல்வரவாகட்டும்” என்றும் தனது பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு