பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? | A. C. Shanmugam Announces Sundar C as Candidate for Madurai Central; DMK Stronghold Faces Challenge

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? | A. C. Shanmugam Announces Sundar C as Candidate for Madurai Central; DMK Stronghold Faces Challenge

Chennai

oi-Vishnupriya R

சென்னை: புதிய நீதி கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிடுவார் என கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ள நிலையில் அந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவார். மேலும் இந்த தொகுதி திமுகவின் வலுவான எஃகு கோட்டை என சொல்லப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமமுக, புரட்சி பாரதம், உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

ac shanmugam sundar c ptr palanivel thiyagarajan

அதில் அதிமுக 167 தொகுதிகளிலும், பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 இடங்களிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 இடங்களிலும், ஐஜேகே இரு இடங்களிலும் புதிய நீதி கட்சி 2 இடங்களிலும் புரட்சி பாரதம் ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.

இதில் புதிய நீதி கட்சிக்கு அதிமுக சார்பில் ஒரு தொகுதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதி பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியை புதிய நீதி கட்சிக்கு கொடுக்கிறது. எனவே ஒரு தொகுதியில் இரட்டை இலையிலும் மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் அக்கட்சி போட்டியிடுகிறது என ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

அதில் அதிமுக சார்பில் அக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வட மாவட்டம், ஆரணியை பூர்வீகமாக கொண்டு சண்முகம், மதுரை மத்தியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என நேற்றே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் மதுரை மத்தியில் யார் வேட்பாளர் என்ற சந்தேகம் எழுந்தது. தற்போது இயக்குநர் சுந்தர்.சி.யை களமிறக்குவதாக சண்முகம் அறிவித்துள்ளார். சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

யார் இந்த சுந்தர் சி

சுந்தர் சி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 37-க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். இவரது கதை பெரும்பாலும் காமெடி கலந்த சப்ஜெக்ட்டாகவே இருக்கும். இவர் உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், முறைமாமன், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

முறைமாமன் படத்தை இயக்கிய போது அதில் நடித்த குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். குஷ்பு தற்போது பாஜகவில் இருக்கிறார். சுந்தர் சி எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் ஏசி.சண்முகத்துடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார். அது போல் கடந்த முறை ஏ.சி. சண்முகம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது கூட சுந்தர் சியுமி, குஷ்புவும் அவருக்காக பிரச்சாரம் செய்திருந்தனர்.

அது போல் அண்மையில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3, அரண்மனை 4 என அமானுஷ்ய சக்திகளை விளக்கும் படத்தை இயக்கியிருந்தார். எந்த கட்சியிலும் இல்லாத சுந்தர் சி, தற்போது புதிய நீதிக் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட கட்சி தேவையில்லை

சட்டசபை தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஒரு அரசியல் கட்சியில் இருக்க வேண்டும் என்றில்லை. சுயேச்சைகளை போல் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யாரை வேண்டுமானாலும் அரசியல் கட்சியினர் களமிறக்கலாம். சுந்தர் சியை பொருத்தமட்டில் பிரபலமானவர் என்பதால் அவரை வேட்பாளராக சண்முகம் அறிவித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மதுரை மத்திய தொகுதியின் எம்எல்ஏ பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மேலும் இந்த தொகுதி திமுகவின் கோட்டை என சொல்லலாம். இங்கு 6 முறை திமுக வென்றுள்ளது. ஒரு முறை அதிமுகவும், ஒரு முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிகவும் வென்றிருக்கிறது. இந்த தொகுதியில் சுந்தர் சி வெல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *